இதை நான் எழுதவில்லை .நண்பர் றஸ்மின் தனது இணையதளத்தில் எழுதியதை காப்பி பேஸ்ட் பண்ணியுள்ளேன் .இது சிலரை சுட்டால் நான் பொறுப்பல்ல
ஒருவர் தாம் கேள்விப்பட்டதை எல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போதுமான சான்றாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 6.
சிலர் அடுத்தவர்கள் பற்றி எதைக் கேள்விப் பட்டாலும் உடனே அதைப் பரப்புவதற்கு முன்வந்து விடுவார்கள். அதைப் பற்றி ஆய்வு செய்வதோ, அதன் உண்மைத் தன்மையை கண்டறிவதோ இல்லை. உடனே அதைப் பற்றி பரப்ப ஆரம்பித்து விடுவர்.
இப்படி யாராவது இந்தக் காரியத்தில் ஈடுபட்டால் அதுவே அவர் பொய்யர் என்பதற்கு போதுமான சான்றாகும் என்று நபியவர்கள் தெளிவாக்குகின்றார்கள்.
பொய் என்பது திட்டமிட்டு உருவாக்கி சொல்வது மட்டுமல்ல கேள்விபட்டதை எல்லாம் ஆய்வு செய்யாமல் பரப்புவதே அவன் பொய்யன் என்பதற்கு போதுமான சான்றுதான்.
உலகின் சிறு இன்பத்திற்காக மறுமையில் திவாலாகலாமா?
"திவாலாகிப் போனவர் யார் என்று நீங்கள் அறிந்திருக்கின்றீர்களா?''என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்ட போது, "யாரிடத்தில் பணமும், பண்ட பாத்திரங்களும் இல்லாமல் இருக்கின்றதோ அவர் தான்'' என்று நபித்தோழர்கள் பதிலளித்தனர்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், "எனது சமுதாயத்திலிருந்து திவாலாகிப் போனவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஜகாத் ஆகியவற்றைக் கொண்டு வருவார். மேலும் அவர் இன்னொருவரைத் திட்டியிருப்பார். அவர் மீது அவதூறு சொல்லியிருப்பார். அவரது பொருளைச் சாப்பிட்டிருப்பார். அவரது ரத்தத்தை ஓட்டியிருப்பார். அவரை அடித்திருப்பார். எனவே (பாதிக்கப்பட்ட) அவருக்கு இவரது நன்மைகளிலிருந்து அல்லாஹ் வழங்கி விடுவான். இன்னாருக்கு அவரது நன்மைகளை வழங்கி விடுவான். அவர் மீது உள்ள வழக்கு தீர்க்கப்படும் முன் அவரது நன்மைகள் தீர்ந்து போய் விட்டால் (பாதிக்கப்பட்ட) அவர்களின் பாவங்கள் எடுக்கப்பட்டு இவர் மீது எறியப்பட்டுப் பின்னர் நரகத்தில் தூக்கி எறியப்படுவார்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 4678
திவாலாகியவர்கள் யார் என்று நபி கேட்டவுடன், அனைத்து ஸஹாபாக்களும் பொருளாதாரத்தில் குறையுள்ளவர்கள் தான் திவாலாகிப் போனவர்கள் என்று பதில் சொல்கிறார்கள் ஆனால் நபியவர்களோ அதை மறுத்து உண்மையில் திவாலாகுதல் என்றால் என்ன என்பதை விபரிக்கிறார்கள்.
அவதூறினால் பாதிக்கப்படுபவனின் மன நிலையில் இருந்து சிந்தித்துப் பாருங்கள்.
அடுத்தவர்கள் பற்றி நாம் கொள்ளும் தீய எண்ணங்கள் காரணமாக அவர்கள் பற்றி அவதூறு செய்திகளை அள்ளி வீசுகின்றோம். அப்படி அவதூறு செய்திகளை சொல்லும் போது அதை தாங்கிக் கொள்ள முடியாமல், தங்கள் கவுரவத்தை பாதுகாக்க, மரியாதையை இழக்க விரும்பாமல் அவர்கள் படும் பாட்டை அவரவர் அனுபவித்தால் தான் உண்மை புரியும்.
உலகில் எவன் எந்தச் செய்தியைச் சொன்னாலும் அதை நாம் எப்படி அணுக வேண்டும் என்பதற்கு அல்லாஹ் அழகியதொரு வழிகாட்டுதலைத் சொல்கிறான்.
நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப் படுவீர்கள். (அல்குர்ஆன் 49:6)
எவன் எந்தச் செய்தியைச் சொன்னாலும் அதை யார் சொன்னார்? எப்போது சொன்னார்? சொன்னாரா இல்லையா? இவன் சொல்வது உண்மையா? பொய்யா? என்பதையெல்லாம் ஆய்வு செய்து அதன் பின் குறிப்பிட்ட செய்தியின் உண்மைத் தன்மையை புரிந்து கொண்டு தான் நாம் அதைப் பற்றிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர எவன் என்ன சொன்னாலும் அதை நம்பி உடனே அதனைப் பரப்ப முற்பட்டால் அவனை விட பொய்யன் யாரும் இல்லை.
ஆக அன்பின் சகோதரர்களே நாம் உண்மையான முஃமின்களாக அல்லாஹ்வை நம்பியவர்களா இருந்தால் மற்றவர்கள் மேல் தேவையற்ற கெட்ட எண்ணங்களை ஏற்படுத்திக் கொள்ளாமலும், அவதூறான செய்திகளைப் பரப்பாமலும் வாழ்ந்து இம்மையிலும், மறுமையிலும் வெற்றி பெருவோமாக!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.